விஜய் துரோகியா? - ஒரு ரசிகனின் குமுறல்!

விஜய் ராஜபக்ஷேவுக்கு எதிராக கையெழுத்திட மறுத்ததால் அவர் துரோகியா என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்! 
இது பற்றி நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் தனது உள்ளக் குமுறலை என்னிடம் கொட்டியிருந்தார்! அதில் ஒரு பகுதியை அப்படியே.. 
கடந்த காலத்தில் அதாவது காவலன் வந்த காலத்தில் அண்ணன் டாக்டர் விஜய் ஈழத்தமிழருக்கு ஆதரவா கொந்தளித்து குரல் கொடுத்தது உண்மைதான்! அப்போது கூட சிலர், விஜய் தனது சுயநலத்திற்காக அப்படிச்செய்கிறார் என அறிவுகெட்டதனமாக அண்ணனின் இதயசுத்தியை, நேர்மையைச் சந்தேகித்தார்கள்!  
அவர்கள் இப்போது வேலாயுதம் படம் ரிலீசாவதால் இந்த நேரத்தில் எதையாவது பண்ணினால் படம் இலங்கையில் தடை செய்யப்பட்டு விடுமென்பதால் அண்ணன் பம்முவதாகவும் கூறுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது இவர்களைப் பார்த்தால்! என்ன ஒரு அறியாமை!

அவர்களுக்காக நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்!

அண்ணன் தனது இடைவிடாத நற்பணிகளுக்கு மத்தியிலும் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து தூக்கி விடுவதாக அண்ணன் விட்ட சவால் உங்களுக்கு நினைவிருக்கா?அண்ணனே மறந்திருந்தாலும் நாங்க மறக்கமாட்டோம்! அண்ணனின் அந்தப் பேச்சால் அண்ணனின் எத்தனை ரசிகர்கள் இலங்கையைவிட்டே அவசரமா வெளிநாடுகளுக்கு ஓடினார்கள், எத்தனை பேர் இன்னும் பீதியுடன் இங்கே வாழ்கிறார்கள் என்று தெரியுமா?

இந்த சம்பவத்திற்குப் பிறகு சர்வதேசமே அண்ணனின் நடவடிக்கைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இந்தக்கையெழுத்து எவ்வளவு தீவிரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஏன் இவர்கள் புரிந்த கொள்ள மறுக்கிறார்கள்? 

அவரது பேச்சில் பாதி புரியாததால் அதில் நியாயமிருப்பதாகவே தோன்றியது!

இந்த விஷயத்தில், 'சரியாகப் புரிந்துகொள்ள முடியாத கருத்துக்கள் பெரும்பாலும் நியாயமானவையாகவே இருக்கின்றன' என்ற ஜியோக்கியூட்ரசின் (கி.மு.781 - 827) வார்த்தைகளை நான் நம்புகிறேன்!

நான் சில பதிவுகளில் டாக்டர் விஜயை கலாய்த்ததாக வருத்தப்பட்டார்கள் சில நண்பர்கள்! இனி அப்படி நடந்து கொள்வதாக இல்லை - அதனால்தான் எனது கருத்தைச் சொல்லாமல் ஒரு ரசிகனின் குமுறலை பதிவு செய்திருக்கிறேன்! 

தமிழகத்தின் ஒரு பிரபல 'நடுநிலை' நாளிதழ்தான் இந்த விஷயத்தில் இப்படி விஜய்யைக் கோர்த்து விட்டதாகவும் சொல்கிறார்கள்! இதுவும் உண்மையாகவே இருக்கலாம்!

அதே நாளிதழ்தான் மூன்று வருஷத்துக்கு முதல் அஜித்தைக் கோர்த்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்!அந்த நேரத்தில் நம்ம நண்பர்களான புலம்பெயர் நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் சிலர் உற்சாகமாக ஏகனைப் புறக்கணிப்போம்னு Facebook ல ஒரு Page கிறியேட் பண்ணி இருந்தார்கள்!  

புலம்பெயர் தமிழர் எல்லாரும் வெற்றிகரமாக புறக்கணித்ததால்,'எஸ்' ஆகிட்டாய்ங்க! நாமதான் தெரியாம போயி.. சோகன் ஆகிட்டோம். 

அந்தப் புறக்கணிப்பாலதான் அந்த அருமையான படம் ஊத்திக்கிச்சுன்னு இன்னும் சிலபேர் சீரியஸா நம்பிட்டிருக்காய்ங்க - இயக்குனர் ராஜூசுந்தரம் உட்பட!


அதே நேரம் இந்த சர்ச்சைக்கு தகுந்த பதில் சொல்வதற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் உட்கார்ந்து கடுமையாக யோசித்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் நல்லதொரு பதில் தருவார் என்றும் அவர் சொன்னார்! 

மேன்மை தங்கிய திரு.எஸ்.ஏ.சியின் அறிக்கைகள், கருத்துகள் என்றுமே பொருள் பொதிந்தவை! ஆழமாக சிந்திக்கத் தூண்டுபவை!

திமுக வின் படுதோல்விக்கு என்ன காரணம்? இதற்கான பதில் தேடி பத்திரிகையாளர்கள், பதிவர்கள், உடன்பிறப்புகள், ஏன் ஜெயலலிதா கூட தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது எஸ்.ஏ.சி. அதற்கான காரணத்தை மிக எளிமையாக விளக்கினார். அதாகப்பட்டது,

'கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்களில் ஐம்பது வீதமானோர் விஜய் ரசிகர்கள்!'

மீதி ஐம்பது வீதம்? 

அவர்கள் எஸ்.ஏ.சி.யின் ரசிகர்கள் என்பதை அவர் சொல்லி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை!    

0 comments:

Post a Comment