உங்களை பிரதிபலிக்கும் ஓர் அசத்தலான இணையதளம்

எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும். சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள்.

மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க, உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.ஜட்ஜ்.மீ என்னும் அந்த தளம் சக இணையவாசிகள் உங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.

மற்றவர்களின் எண்ணங்களை அறிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை இடம்பெற செய்வது மட்டும் தான். அதன் பிறகு உறுப்பினர்கள் உங்களை பற்றிய அபிப்ராயத்தை தெரிவிப்பார்கள்.
பர்ஸ்ட் இம்ப்ரஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டல்லவா? அதே போலவே உங்களை பார்த்ததும் தோன்றக்கூடிய சித்திரத்தை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 
ஒவ்வொருவருக்கும் உங்களை பார்க்கும் போது எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் தெரிவிக்கும் கருத்துக்கள் வழியே அறிந்து கொள்ளலாம்.எப்படியும் தினந்தோறும் நம்மை எத்தனையோ பேர் பார்க்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நம்மைப்பற்றி ஒரு அபிப்ராயம் தோன்றும். அந்த அபிப்ராயங்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

அபிப்ராயம் என்பதும் பக்கமாக கருத்துக்களோ அல்லது விமர்சனங்களோ கிடையாது. அபிப்ராயங்கள் அழகாக வரைபடத்தின் வாயிலாக உணர்த்தப்படுகின்றன.ஒவ்வொரு புகைப்படத்தின் அருகிலும் இந்த வரைபடம் தோன்றுகிறது. சகஜமாக பேசக்கூடியவர், கூச்ச சுபாவம் உள்ளவர், புத்திசாலியானவர், அழுத்தமானவர் என நான்கு காரணிகளின் அடிப்படையில் வரைப்படத்தில் ஒருவரை பற்றிய மதிப்பீடு காட்டப்படுகிறது.

புகைப்படத்தை பார்த்ததும் தோன்றக்கூடிய எண்ணங்களை இனையவாசிகள் வரைபடத்தின் மீது கிளிக் செய்து உணர்த்தலாம். இணையவாசிகளின் அபிப்ராயம் சேர வரைபடத்தில் அவற்றின் முடிவுகளையும் அழகாக காணலாம்.தேர்தல் போன்ற நேரங்களில் கட்சிகளின் செல்வாக்கு அலசி ஆராயப்பட்டு வரைபடத்தின் மீது காட்டப்படுவது போல நீங்களும் உங்களைப்பற்றிய அலசலை வரைபடமாக காணலாம்.

ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தில் புகைப்படத்தை சமர்பித்து மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். அதே போல இந்த தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மற்றவர்களின் புகைப்படங்களையும் பார்த்து தங்களுக்கு தோன்றும் முதல் எண்ணத்தை தெரிவிக்கலாம்.இந்த மதிப்பீட்டு தளத்தை பார்க்கும் போது மற்ற மதிப்பீட்டு தளங்களுக்கு எல்லாம முன்னோடியாக கருத்தப்படும் ‘ஹாட் ஆர் நாட்’ தளத்தின் நினைவு வரலாம்.

ஹாட் ஆர் நாட் தளம் ஒருவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்களின் புகைப்படத்தை பார்த்து மற்றவர்கள் மதிப்பெண்கள் அளிப்பதை அடிப்படையாக கொண்டது. இந்த தளம் சுவாரஸ்யமானது என்றாலும் இதன் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு.
 
ஆனால் ஜட்ஜ்.மீ தளம் அவ்வாறு இல்லாமல் எவருக்குமே ஆர்வம் இருக்ககூடிய தங்களைப்பற்றிய மற்றவர்களின் முதல எண்ணங்களை அறிய உதவுகிறது. இதன் அடிப்படையில் ஒருவர் பொதுவாக தங்களைப்பற்றி அறிந்து கொண்டு தேவை என்றால் தங்களை மாற்றி கொள்ளவும் முற்படலாம்.
 

1 comments:

Anonymous said...

Fine way of telling, and good piece of writing to obtain facts concerning my presentation
subject matter, which i am going to present in institution of higher education.



Here is my page ... Psn Code Generator

Post a Comment