ஆபத்தான நேரத்தில் நெருக்கடிக்கு மத்தியில் இண்டர்நெட் பேருதவியாக அமைந்து உயிர்காத்த சம்பவங்கள் அநேகம் இருக்கின்றன.
இந்த வகையில் அமெரிக்காவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தனது வீட்டில் தீ சூழ்ந்த நிலையில் உயிர் தப்பித்த பேஸ்புக் விளையாட்டு கைகொடுத்து இருக்கிறது. சமூக வலைப் பின்னல் தளங்களின் ராஜாவாக கருதப்படும் பேஸ்புக் சேவையை பெரும்பாலும் இளைஞர் களே பயன்படுத்தி வந்தாலும் பெரியவர்களும் இதில் இணைந்து வருகின்றனர்.
நட்பு வட்டாரத்தை பெருக்கிக்கொள்ள, கருத்து பரிமாற்றம் செய்ய என பேஸ்புக்கை பலவிதமாக பயன் படுத்திக்கொள்ளலாம்.
பேஸ்புக்கிலேயே விளையாடக் கூடிய விளை யாட்டுக்களும் பல இருக்கின்றன. மிகவும் பிரபலமாக இருக்கும் பாம் வில்லே தவிர வேறு பல விளை யாட்டுக்களும் இருக்கின்றன. இந்த விளையாட்டுக்களில் ஒன்று தான் அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பாப் சேம்பர்சின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.
சேம்பர்சுக்கு 51 வயதாகிறது. அவர் ஸ்போக்கனே எனும் சிறிய நகரில் வசித்து வருகிறார். தசை தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டதால் சேம்பர்சால் மற்றவர்களைப் போல தனது கை, கால்களை எல்லாம் எளிதாக அசைக்க முடியாது. தானாக நகர்ந்து செல்வது கூட அவருக்கு மிகவும் கடினமானது.
இத்தகைய பாதிப்பு இருந்தாலும் சேம்பர்ஸ் உற்சாகம் குறைந்து விடாமல் இருந்து வருகிறார். கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரத்யேக மவுஸ் சாதனத்தைக் கொண்டு அவர் கம்ப்யூட்டரை இயக்கி வருகிறார்.
பேஸ்புக்கிலும் உறுப்பினராக இருக்கும் அவர் பேஸ்புக் விளை யாட்டிலும் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேஸ்புக் விளையாட்டில் லயத்திருப்பது அவரது வழக்கம். சமீபத்தில் இப்படித்தான் அவர் பேஸ்புக் விளையாட்டில் மூழ்கி இருந்தபோது திடீரென அவரது அறையில் தீப்பிடிக்க தொடங்கியது. அவரது மனைவி டோஸ்ட் சாதனத்தை அணைக்காமல் சென்று விட்டதின் காரணமாக தீ பிடித்துக் கொண்டது. தீ மெதுவாக பரவத் தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டாலும் சேம்பர்சால் விலகிச்செல்லவும் முடியவில்லை.தொலைபேசிமூலமும் தொடர்புகொள்ள முடியவில்லை. தொலைபேசி அந்த அறையில் சற்று தொலைவில்இருந்ததால் அவரால் தொலைபேசியை பயன்படுத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது.
தீ பரவிக்கொண்டிருந்த நிலையில் சேம்பர்ஸ் அதன் நடுவே சிக்கிக் கொண்டது சோதனையிலும் சோதனை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த நெருக்கடியிலும் அவர் நிலை குலையாமல் தொழில்நுட்பத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து பேஸ்புக் மூலம் தனது நிலையை தெரிவித்தார். அவர் ஈடுபட்டிருந்த பேஸ்புக் விளையாட்டில் சக உறுப்பினர்களோடு அரட்டை அடிக்கும் வசதி உண்டு.
சேம்பர்ஸ் அந்த வசதியை பயன்படுத்தி தனது அறையில் தீ பிடித்துக் கொண்டிருப்பதாகவும் தன்னால் நகர முடியாததால் யாராவது இது பற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறி தனது முகவரியையும் குறிப்பிட்டிருந்தார்.
சகல உறுப்பினர்கள் யாராவது இந்த செய்தியை படித்துப் பார்த்து விட்டு உதவிக்கு வருவார்கள் என்பது அவருடைய நம்பிக்கை.
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இண்டியானா நகரில் இருந்த ஒரு பெண்மணி மற்றும் டெக்சாஸ் நகரில் இருந்த ஒருவர் இந்த செய்தியை பார்த்து விட்டு உடனடியாக அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஸ்போக்னே நகர நிர்வாகம், சேம்பர்ஸ் வீட்டிற்கு தீயணைப்பு வீரர்களை அனுப்பி வைத்தது.
சேம்பர்ஸ் தான் ஆபத்தில் இருப்பதாக காலை 8.35 மணி அளவில் தகவல் தெரிவித்திருந்தார். அடுத்த 10வது நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டிற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி அவரை காப்பாற்றினர்.
பேஸ்புக் உறுப்பினர்கள் மட்டும் சரியான நேரத்தில் உதவிக்கு வந்திருக்காவிட்டால் தன்னுடைய நிலை மிகவும் மோசமாகி இருக்கும் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்.
அவரது மனைவியும் கூட பேஸ்புக்கை மனதார பாராட்டி உள்ளார். பேஸ்புக் விளையாட்டின் மீது அவருக்கு மிகுந்த வெறுப்பு உண்டாம். காரணம் அந்த விளையாட்டில் மூழ்கிவிட்டால் சேம்பர்ஸ் எதைக் கேடடாலும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாராம்.
இருப்பினும் அந்த விளையாட்டுத் தான் தனது கணவரின் உயிரை காப்பாற்றி இருப்பதால் இப்போது அந்த வெறுப்பு மறைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
நவீன தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருப்பதோடு ஆபத்து நேரத்தில் கை கொடுக்கிறது என்பதற்கான மற்றொரு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment